திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடரும் என அறிவித்ததையடுத்து, மே மாதத்திற்கான 1,000 ரூபாய் உரிமைத் தொகை தகுதி பெற்ற பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று (மே 15 ஆம் தேதி) வரவு வைக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் கோரிக்கை
இந்த நிலையில், விழிகள் அமைப்பு சார்பில் அதன் செயலாளர் துர்காஸ்ரீ, முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். அவர் கூறுகையில், மாற்றத்தை எதிர்பார்த்து திருநங்கை சமூகத்தினர் புதிய அரசுக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்தார்.
திருநங்கைகள் விண்ணப்பம் நிராகரிப்பு
முந்தைய ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் சில திருநங்கைகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகவும், பல திருநங்கைகள் விண்ணப்பித்திருந்தும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வேண்டும்
எனவே, அனைத்து திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில் தனித்த அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் திருநங்கைகளுக்கு எந்த தடையும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம்
பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படுவது போல, திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருநங்கைகளுக்கு வீட்டு வசதி
கடந்த 2019 ஆம் ஆண்டு கண்ணகி நகர் பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக அவர் கூறினார். எனவே, அந்த வீடுகளுக்கு மாற்றாக பாதுகாப்பான இடங்களில் புதிய குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீட்டு வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரினார்.
தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
தமிழ்நாட்டில் மொத்தம் 22 ஆயிரத்து 634 திருநங்கைகள் வாழ்ந்து வருவதாகவும், தென் சென்னையில் மட்டும் சுமார் 1,954 பேர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பதால், மருத்துவமனைகள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பிற அரசு துறைகளில் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருநங்கை சமூகத்தின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தலைமையில் அமைந்த புதிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.


