பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 % தேர்ச்சி விகிதம்பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து திருப்பூர் 97.79% பெரம்பலூர்97.59% தேர்ச்சி விகிதம் உள்ளது.
அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6,573 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றவர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.
இயற்பியலில் 812 பேரும் வேதியலில் 3,909 பேரும், உயிரியல் பாடத்தில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பெரும், கணினி அறிவியல் பாடத்தில் 4,618 பேரும், வணிகவியல் பாடத்தில் 5,678 பேரும், பொருளியல் பாடத்தில் 1,760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4,051 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியில் பாடத்தில் 1,334 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தச்சுத் தொழிலாளியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.