தனியார் விடுதியில் 116 பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது.

இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இங்கு தங்கி உள்ள 116 பெண் ஊழியர்களுக்கு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

உணவில் நச்சுத்தன்மை

இது குறித்து தகவலறிந்த பொதுசுகாதார துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரிந்தது. ஏராளமான தொழிலாளர்கள் தங்களது பெற்றோர் அறிவுரையின் பேரில் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர். அங்கிருக்கும் சக ஊழியர்களுக்கு 6 மருத்துவக்குழு அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் மீது கொரோனா தொற்று காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *