சென்னை: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இன்று அரசிதழில் வெளியீட்டது.
ஆன்லைன் மூலமான ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிற சம்பவங்கள் தொடர்ந்தன. இதனையடுத்து முந்தைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது தொடர்பான நீதிமன்ற வழக்கில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. புதிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரவும் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில், ஆன்லைன் விளையாட்டுகள் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டதால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவ் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதா மீது ஆளுநர் சில விளக்கங்கள் கோர தமிழ்நாடு அரசும் உடனடியாக பதிலளித்தது. ஆனால் 131 நாட்கள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த மாதம் 6-ந் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார். இப்படியான ஒரு மசோதாவை நிறைவேற்ற சட்டசபைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பது ஆளுநரின் கேள்வி.
இதனால் கடந்த மார்ச் 9-ந் தேதி தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் கூடி அதே மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது. கடந்த மார்ச் 23-ந் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இம்மசோதா மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே மசோதாக்களை நிறுத்தி வைத்தாலே நிராகரித்ததாகிவிடும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் கண்டனத் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தம்ழிநாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. தாம் 3 நாட்களுக்கு முன்னதாகவே ஒப்புதல் அளித்துவிட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக கெஜட்டில் – அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.