இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.. பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசலிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப்படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ரமலான் மாதம்

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இத்தகையை நோன்பு நோற்பார்கள். சூரிய உதயத்திற்கு முன் மட்டும் உணவு சாப்பிடுகிறார்கள். இதனை சஹர் என்பார்கள்.

ரமலான் நோன்பு

அதன்பிறகு முழுநாளும் உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள். அதன்பிறகு மாலையில் நோன்பை முடித்து உணவு எடுத்து கொள்வார்கள். இந்த உணவை இப்தார் என்பார்கள். இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

வளர்பிறை மூலம் கணக்கீடு

இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் வளர்பிறை நிலவின் பிறை தோன்றிய பின், அதை வைத்து ரமலான் தேதி அறிவிக்கப்படும்.

நோன்பு தொடக்கம்

இந்நிலையில், நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ரமலான் நோன்பு தொழுகை இரவில் தொடங்கியது. அத்துடன் அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க தொடங்கினர். இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஏராளமான பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *