ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி:
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 30 நாட்கள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது திமுக முழு ஆதரவு அளிக்கும் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது என திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார்.
பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாகவும், ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை என்று கூறிய கெஜ்ரிவால், நீதிமன்றத்தை மதிப்பதாகவும், ஆனால் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல் சாசனம், ஜனநாயகம், அரசியல் மற்றும் நாட்டிற்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.