சென்னை: ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக உயர்கல்வியை தொடராமல் விட்டுவிடுகிறார்கள். அப்படி படிக்காமல் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது.
இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளங்கலை மருத்துவம், என்ஜினீயரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
உயர்கல்விதுறை வட்டாரங்கள் கூறிய தகவலின் படி, தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதன் காரணமாக, 2022-23-ம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2021ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டு உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பள்ளி அளவில் இந்த திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறும் அரசு அதிகாரிகள், வறுமையின் காரணமாக பள்ளிக்கு பிறகு, உயர்கல்விக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்படும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதத்தை இந்த திட்டம் பெரிதும் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,