தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுபோன்ற கட்டுப்பாடுகளை மீறி மதுபோதையில் வாகனங்களில் சுற்றுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகர போலீசார் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். அதில், “நாளை (31-ந்தேதி) இரவு 12 மணிக்கு பிறகு பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (31-ந் தேதி) இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகன போக்குவரத்திற்கு 1.1.2022 அன்று காலை 5 மணி வரை அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை (31-ந்தேதி) இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.