
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறிந்து மூடுவோம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பேசிய மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளார். இவர் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறியப்பட்டு மூடுப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100 தொகுப்பூதியம், விற்பனையாளர்களுக்கு ரூ.930 தொகுப்பூதியம் உயர்த்தி தரப்படும். அதேபோல் டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840 தொகுதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.