அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான பணமோசடி புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக செல்வதாகக் கூறியதால் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதன் பிறகும் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யாத குற்றப்பிரிவு காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு முறையிட்டது.
அதே நேரத்தில், அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தவும், செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் அமர்வு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும் ஆணையிட்டனர்.
மேலும், அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.