மதுரை: வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தியை பணி நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் பேக் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனது தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மதுரை வந்திருக்கிறார். அப்போது நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் தனது நண்பரை சந்திக்க சென்றிருக்கிறார். இப்படியாக நாகமலை புதுக்கோட்டை வந்து சேர்ந்த அர்ஷத்திடம் அப்போது பணியில் இருந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரூ.10 லட்சம் ரொக்கம் வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆய்வாளர் வசந்தி தன்னுடன் இருந்த பால்பாண்டி, உக்கிரபாண்டி, பாண்டியராஜன், சீமைச்சாமி ஆகியோரின் உதவியுடன் அர்ஷத்திடம் இருந்த பணத்தை ஆய்வு என்கிற பெயரில் பறிமுதல் செய்திருக்கிறார். மேலும் பணம் வேண்டும் எனில் காவல்நிலையம் வந்து இது தன்னுடைய பணம்தான் என்பதை எழுதி கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அர்ஷத் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சென்று பணத்தை திரும்பி கேட்டிருக்கிறார்.
ஆனால் ஆய்வாளர் வசந்தி பணத்தை கொடுக்காமல், பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று அர்ஷத்தை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார் அர்ஷத். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆய்வாளர் வசந்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வசந்தி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்வதாக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அவரை கோத்தகிரியில் வைத்து தனிப்படை போலீஸ் கைது செய்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்தார். இப்படி இருக்கையில்தான் வழக்கின் போக்கை மாற்றுவதற்காக வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் சாட்சியங்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்கின் முக்கிய சாட்சியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை உயர் அதிகாரிகள் விரசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் மிரட்டல் வழக்கு தொடர்பாக மதுரையில் தனது வீட்டில் இருந்த வசந்தியை காவல்துறையினர் கடந்த 31ம் தேதி அவரை கைது செய்தனர். இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது, “வசந்தி இரண்டு முக்கியமான வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். முதல் வழக்கு பணம் பறிப்பு. இரண்டாவது சாட்சியங்களை மிரட்டுவது. முதல் வழக்கில் ஜாமீன் பெற முயன்றபோது, சாட்சியங்களை நேரில் சந்திக்கக்கூடாது என்பதுதான் பிரதான நிபந்தனை. ஆனால் அதனை அவர் மீறியதோடு மடடுமல்லாது சாட்சியங்களை மிரட்டியும் உள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர் கைது செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இந்த பிரச்னைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், தொடர் புகார்கள் காரணமாக ஆய்வாளர் வசந்தியை காவல் துறையிலிருந்து முற்றிலுமாக நீக்குவதாக அதாவது டிஸ்மிஸ் செய்வதாக மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார். மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.