கர்நாடகா சட்டசபை தேர்தல்: புலிகேசி நகரை அடுத்து மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஓபிஎஸ்

சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட மேலும் இரு வேட்பாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது.இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் போட்டியிட தங்களுக்கு புலிகேசி நகர் தொகுதியை ஒதுக்கித் தாருங்கள் என அதிமுக சார்பில் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பாஜகவோ அதிமுகவுக்கு தொகுதியை ஒதுக்காமல் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.

இதையடுத்து புலிகேசி நகர் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். டி அன்பரசனை வேட்பாளராக அறிவித்தார். புலிகேசி நகர் தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். இங்கு எப்படியும் வென்றே தீருவேன் என அன்பரசன் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதே தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு போட்டியாக ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவித்தார்.

அந்தத் தொகுதிக்கு கர்நாடகா மாநில மாணவர் அணிச் செயலாளர் எம். நெடுஞ்செழியன் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் மேலும் இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஓபிஎஸ் நிறுத்தியுள்ளார்.

கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். அனந்தராஜ் கர்நாடகா மாநில தலைவராக உள்ளார். கர்நாடகா மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த முரளி போட்டியிடுகிறார். அதிமுக பொதுக் குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தாலும் கூட தேர்தல் ஆணையத்தில் அதிமுக பிரச்சினை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசுவுக்கு போட்டியாக செந்தில் முருகன் எனும் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்கிணங்க ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார். இந்த கோபத்தில் அந்த வேட்பாளர் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *