பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கலாஷேத்ரா மாணவிகள் கடிதம்

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டதை பள்ளி நிர்வாகம் திரும்பப் பெற்றது ஏன்? நீண்ட நாட்களாக நடைபெற்ற சம்பவத்தை ஒன்றிய அரசு மூடி மறைப்பது ஏன் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை, திருவான்மியூரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனம் உள்ளது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் ஒன்றிய அரசு இதை தன்னாட்சி அமைப்பாக அறிவித்தது.

இதற்கு, ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கொடுத்து வந்தனர். ஆனால், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால், சோஷியல் மீடியாவில் மாணவிகள் குற்றசாட்டுகளை பகிரங்கப்படுத்தி இருந்தனர்.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளனர் என மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நடத்திய பிறகு, அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை என்று, தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென புகாரை வாபஸ் பெற்றது, மாணவிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்குவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி நேற்று கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் அனைவரும், தங்களது பதாகைகளை ஏந்தி, நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதில் அளிக்காத நிலையில் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பில் நேற்று இரவு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். அவர்களை கல்லூரி இயக்குனர்கள் மற்றும் நடன துறை தலைவர் காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *