சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களாக சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை அரசுப் பள்ளிகளில் பயின்று ஜேஇஇ, என்.ஐ.எஃப்.டி, நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐஐடி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை சென்னை மாநகராட்சி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.