அதிரடி அறிவிப்பு.. சர்வதேச நாடுகளில் இருப்பதை போல சென்னையில் பன்னாட்டு அரங்கம்.. கருணாநிதி பெயரில்

சென்னை : சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. 100வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கலைவாணர் அரங்கில், கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். மக்கள் மனங்களில் இன்றும் கருணாநிதி வாழ்கிறார். எனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கு காணிக்கை ஆக்குகிறேன். கருணாநிதி திமுகவின் சொத்து அல்ல உலகத் தமிழர்களின் சொத்து எனப் பேசினார்.

ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால், தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் சர்வதேச பன்னாட்டு மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்றும், உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக இது அமையும் எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும், சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *