
புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து 191 டுரோன்கள் ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, பாதுகாப்பு படையினர் அளித்த தகவல்கள் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 2022 ஜன., 1 முதல் செப்.,30 வரை காலகட்டத்தில் இந்திய பகுதிக்குள் 191 டுரோன்கள் நுழைந்துள்ளன. அதில், 171 டுரோன்கள், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் செக்டர் வழியாகவும், 20 டுரோன்கள் ஜம்மு செக்டர் வழியாகவும் நுழைந்துள்ளன. அதில் 7 டுரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். அவை, பஞ்சாபின் அமிர்தசரஸ், பெரோஸ்பூர் மற்றும் அபோஹர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து, ரைபிள்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள், போதைப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஜம்மு மற்றும் பஞ்சாபிற்குள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள் ஆகியவற்றை சர்வதேச எல்லை வழியாக கடத்துவதற்கு இந்த டுரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.டுரோன்கள் அத்துமீறல் குறித்து, சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். டுரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க முடியும் என எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தாலும், மாநில போலீசார் மற்றும் உளவுத்துறையினர் அதில் இருநது மாறுபடுகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில், பயங்கரவாதத்தை வளர்க்கவும், அவற்றுக்கு நிதியுதவி செய்யவும், ஆப்கன் ஹெராயினை டுரோன் மூலம் கடத்தி வரப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள எல்லை பாதுகாப்பு படையினர், ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றை கடத்துவதில், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.டுரோன்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்த தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளை உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதேநேரத்தில், டுரோன்களை கண்காணிக்கும் பணியில் பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.