70 போட்டிகளில் முதல் பரிசு வென்ற `சங்கீதா எக்ஸ்பிரஸ்’ காளை மரணம்; இறுதிச் சடங்கு நடத்திய உரிமையாளர்!

வேலூர் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் `சங்கீதா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் 7 வயதுடைய காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த காளை வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை 70-க்கும் அதிகமான போட்டிகளில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.

இந்த காளை களத்தில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து குறைந்த நொடியில் இலக்கை அடைந்துவிடும் என்பதால், இதற்கென்று ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வடதமிழக மாவட்டங்களில், மாடு விடும் விழாக்கள் எங்கு நடந்தாலும், சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை கலந்து கொள்ள வேண்டும் என்பது விழாக்குழுவினரின் விருப்பமாகவும் இருக்கும். கடைசியாக, கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் கம்மசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற விழாவில்தான் பங்கேற்றது.

அந்தப் போட்டியிலும் முதல் பரிசைத் தட்டி மகுடம் சூட்டியது சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை நேற்று திடீரென உயிரிழந்துவிட்டது. இதனால், காளையின் உரிமையாளர் குடும்பத்தினர் உட்பட மேல்மொணவூர் கிராமமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.இது குறித்து, தகவலறிந்த காளையின் ரசிகர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் மேல்மொணவூர் கிராமத்துக்கு வந்து, காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, கட்டித்தழுவி கதறி அழுதனர். மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகளைப் போன்றே அந்தக் காளைக்கும் மரியாதை செய்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளத்துடன் சங்கீதா எக்ஸ்பிரஸ் காளையைத் தூக்கிச் சென்று பாலாற்றின் கரையோரத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *