சென்னையில் வார்டு 58 இல் அமைந்துள்ள மைலேடீஸ் பூங்கா நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில்
நீச்சல் பயிற்சியின்போது 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நீச்சல் குளத்தை மூடினர்.உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ராகேஷ் குப்தா சென்னை பட்டாளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் தேஜா குப்தா, வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கோடை விடுமுறையையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பேரி My lady Park நீச்சல் குளத்தில் சிறுவன் பயிற்சி பெற்று வந்தார். வழக்கம் போல் தனது தாத்தா மற்றும் தந்தையுடன் நீச்சல் குளத்திற்கு சென்ற சிறுவனை பயிற்சியாளர்கள் அழைத்து சென்றனர்.
பயிற்சி முடிந்து சிறுவர்களை பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் அழைத்து வந்தனர். ஆனால் அதில், தேஜா குப்தா இல்லாததால் அவரது தந்தை கேள்வி எழுப்பினர். சிறுவன் குறித்து தங்களுக்கு தெரியாது என பயிற்சியாளர்கள் கூறியதால், உள்ளே சென்று தேடியபோது, தேஜா நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல்துறையினர் நீச்சல் பயிற்சியாளர்கள் சுமன், செந்தில் குமார் மற்றும் பாதுகாப்பு ஊழியர் பிரேம் குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதனையடுத்து, நீதிபதி உத்தரவின் பேரில் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நீச்சல் குளத்தை மூடினர். நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைத்து பூட்டு போட்டு மாநகராட்சி மண்டலம் 5 அதிகாரிகள் சென்றுள்ளனர்.