
சென்னை: 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது.பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் அப்போதைய மாநகராட்சி ஆணையர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது. இதனால் பெரிய அளவில் திட்டங்கள் இல்லை.சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டது. சென்னையின் 49ஆவது மேயராக ஆர் பிரியா பதவியேற்றார். இந்த நிலையில் இன்னறைய தினம் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் கடைசியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.

தற்போது மேயர் ஆர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்வார் என தெரிகிறது.காலை 9 மணிக்கு இந்த பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. பட்ஜெட் தாக்கலானது அதன் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தை தொடர்ந்து 2022- 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்படும். மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறை ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.