
ராமேசுவரம்: கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தனுஷ்கோடி தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அங்கு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுடன், தரைப்பாலம் தெரிவதைக் காணொளியாகவும் பதிவு செய்கின்றனர்.ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, கடந்த 1964ஆம் ஆண்டு வரை பரபரப்பான தொழில் நகரமாக விளங்கி வந்தது.இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு தனுஷ்கோடியில் இருந்து போக்குவரத்துக் கப்பல்களும் ரயில்களும் இயக்கப்பட்டன. வளர்ந்த நகருக்குரிய வகையில் மருத்துவமனை, துறைமுகம், தபால் நிலையம், கோவில்கள், பள்ளிகள் என அனைத்து வசதிகளும் தனுஷ்கோடியில் இருந்தன.இந்நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வீசிய புயலில் ஒட்டுமொத்த தனுஷ்கோடி நகரமும் அழிந்துபோனது. புயலுக்குப் பின்னர் அது மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறிவிட்டது என இந்திய அரசு அறிவித்தது.மீனவர்கள் சிலர் அங்கு குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், புயலில் மூழ்கிப்போன தரைப்பாலம் ஒன்று தனுஷ்கோடியில் மீண்டும் தென்படுகிறது.இந்தப் பாலம் கான்கிரீட் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அழிந்துபோன நகரத்தின் அடையாளக்கூறுகளில் ஒன்றாக மிஞ்சியுள்ள இந்தத் தரைப்பாலத்தை சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.