56 இயக்கங்கள் ஒன்றிணைந்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவானது.!

சென்னை: தமிழகத்தில் தற்போது திமுகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் சமூக நீதி ஆட்சி என்றெல்லாம் கூறிவரும் நிலையில் சமீபகாலமாகத் திராவிட மாடல் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சர்ச்சை பேச்சுக்களை பேசி வருவதும், இதற்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்டோர் எதிர்கருத்து தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், திராவிட மாடல் தத்துவங்களால் வடமாநிலங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்டாலின் என ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவோ, “தமிழில் எழுதத் தெரியாத தமிழர்களை உருவாக்கி இருக்கின்ற ஒரு ஆட்சி திராவிட மாடல். வெறும் பேசும் மொழியாக தமிழை ஆக்கி இருக்கின்ற சக்தி இந்த திராவிட இயக்கங்கள்” எனப் பதிலளித்திருந்தார்.இதே போல், சமூக வலைதளங்களில் திராவிட மாடல் அரசு குறித்து, “உங்களில் ஒருவன் பதில்கள்” என்ற தலைப்பில் பொதுமக்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். இந்தச் சூழலில், புரட்சித் தமிழகம், நீலப்புலிகள் இயக்கம், செடியூல்டு ஐக்கிய முன்னணி, ரெட்டமலை சீனிவாசன் பேரவை உள்ளிட்ட 56 சிறு இயக்கங்கள் ஒன்றிணைந்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருக்கின்றன.இது குறித்து, சென்னையில் இன்று கூட்டமைப்பை அறிமுகப்படுத்தி புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திராவிட ஆட்சியாளர்களால் பட்டியலின சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. திராவிட ஆட்சியாளர்களால் எங்கள் சமூகத் தலைவர்களான, அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் வரலாறு மறைக்கப்படுகிறது.இவர்களைப் பொதுவெளியில்கூட திராவிட இயக்கத்தவர்கள் யாரும் பேசியதில்லை.பட்டியல் சமூகத்தவர்கள் சுயமாகத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற இதுவரை திராவிட மாடல் அரசுகள் எந்தவொரு திட்டமும் கொண்டுவரவில்லை. இழந்த வரலாற்றை மீட்டெடுக்க மக்களுக்குத் திராவிடத்துக்கு எதிரான புரிதலை உருவாக்க இருக்கிறோம். பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அமைச்சர்கள்கூட வெளிப்படையாகப் பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசி வருகிறார்கள். ஆனால், முதல்வரோ அவர்கள்மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. திராவிடன் என்ற பெயருக்குப் பின்னால் எங்களின் தமிழன் என்ற அடையாளத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். எனவே, மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *