
சென்னை: திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரான பெரம்பலுார் மாவட்டம், வேலுார் கிராமத்தைச் சேர்ந்த ஆ.ராஜா, நீலகிரி எம்.பி.,யாகவும், தி.மு.க., துணை பொதுச்செயலராகவும் உள்ளார். ஏற்கனவே, மத்தியில், ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, சுற்றுச்சூழல்மற்றும் வனத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகிய துறைகளின் இணை மற்றும் கேபினட் அமைச்சராக இருந்தார். நாட்டையே உலுக்கிய, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் ஈடுபட்டதாக, அமைச்சர் பதவியை இழந்ததுடன், சிறை சென்று வந்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த போது, ஹரியானா மாநிலம், குருராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினார். அதற்காக, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி, கோவையில் பினாமி பெயரில், 55 கோடி ரூபாய் மதிப்புள்ள, 45 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதை கண்டுபிடித்து, அந்த நிலத்துக்கு, ‘சீல்’ வைத்தனர்.மத்திய அமைச்சராக இருந்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக, பினாமி பெயரில் துபாய் மற்றும் கேரளா, ஊட்டி, கொடைக்கானல், சென்னை, பெரம்பலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரக்கணக்கான நிலங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கியுள்ளார். அவற்றை அவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அறிவுச்செல்வன், பாஸ்கர், லெட்சுமணன், மகாதேவி, பரமேஸ்குமார், கலீல் உள்ளிட்ட பலரின் பெயர்களில் வாங்கி வைத்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எம்பி ராஜா குவித்துள்ள சொத்துக்கள் குறித்த புள்ளி விபரங்களை, தமிழக அமலாக்கத்துறை அதிகாரிகள், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கிருந்து உத்தரவு வந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபடும் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரது பினாமிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.