
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த மூன்று தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.