
கலிபோர்னியா: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் அளவிற்கு வெளியேற்றி வருகின்றன.அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 12,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக கடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்திய கிளையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 453 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் மெயில் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த மெயில் வியாழக்கிழமையன்று நள்ளிரவில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கூகுள் இந்தியாவின் தலைவரும், துணைத் தலைவருமான சஞ்சய் குப்தா இந்த மெயிலை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 250 ஊழியர்கள் கூகுள் அலுவலகத்திற்கு வெளியே நின்று பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.