4ம் வகுப்பு மாணவன் குற்றச்சாட்டு அரசு வழங்கிய இலவச சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் ஆகிவிட்டது. இனியாவது தரமான நூலில் தைத்துத் தர அரசு ஆவன செய்ய வேண்டும்.!

மதுரை: மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்நிலைக் குழுத் தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 4ஆம் வகுப்பு மாணவன் உதயன், ‘தான் பயிலும் பள்ளியில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், கழிவறையில் போதுமான தண்ணீர் வசதி இல்லை எனவும் பகிரங்கமாக பேசினான். அத்துடன், அரசு அளித்துள்ள இலவச சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் ஆகிவிட்டது. இனியாவது சீருடையை தரமான நூலில் தைத்துத் தர அரசு ஆவன செய்ய வேண்டும்” என்று கூறி, ஒட்டுமொத்த அரங்கையே ஒரு கணம் அதிரச் செய்தான்.கூட்டத்தின் நிறைவில் கல்விக் கொள்கை உயர்நிலைக் குழுத் தலைவரை சந்தித்து எனது கோரிக்கை என்பது ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கை என மாணவன் உதயன் கூறவே, அவனை உயர்நிலைக் குழுத் தலைவர் வெகுவாக பாராட்டினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் உதயன் மற்றும் அவரது தாயார் கோகிலாவாணி, “நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், அரசு பள்ளிகளில் தரமான சீருடைகள் வழங்க வேண்டும் எனவும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *