30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.!!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைவாகவுள்ள 30 குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் திட்டத்தின்கீழ் 9 வட்டாரங்களில் 1,120 குழந்தை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் மாதந்தோறும் குழந்தைகளின் எடை, வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 வயது வரை வயதிற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் உயரத்திற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என மொத்தம் 200 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கிடவும், ஊட்டச்சத்து குறைவாகவுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சி நீக்க மாத்திரைகள் வழங்குதல், இரும்புச்சத்து திரவம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் ஊட்டச்சத்தினை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி 200 குழந்தைகளுக்கு வேர்க்கடலை உருண்டை, வேகவைத்த பச்சைபயறு, பேரிச்சம்பழம், நெய் கலந்த கேழ்வரகு உருண்டை, வறுத்த பொட்டுக்கடலை, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இணை நோய் உள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு வட்டாரங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

தாய்மார்கள் இவ்வூட்டச்சத்து உணவினை தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கினால் தான் ஊட்டச்சத்து நிலை மேம்படும். எனவே தொடர்ந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் அகிலா மற்றும் குழந்தைகள் மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *