2024- மக்களவை தேர்தலுக்கு தயராகும் காங்கிரஸ்? சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் ஆலோசனை.!!

புதுடெல்லி,காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் ஏற்கெனவே இறங்கியுள்ள நிலையில் அவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். இதனால் பாஜகவுக்கு எதிரான புதிய அணியில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்தநிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகள் குறித்த விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் வியூக நிபுணராக செயல்படாமல் கட்சியில் இணைந்து செயல்படுமாறு பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் ஆர்வம் காட்டியதாகவும், கட்சியின் பலவீனம் மற்றும் கட்சியை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாக விளக்கியதாகவும் வரும் 2024- ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டிய 370- தொகுதிகள் எவை என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் விளக்கப்படம் மூலம் எடுத்துரைத்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “மாநிலங்களின் அரசியல் சூழல், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் வியூகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத் தேர்தலின் காங்கிரஸ் வியூகம் குறித்து பிற மாநில தலைவர்களிடம் எடுத்துரைக்கப்படும். 2024ஆம் ஆண்டு தேர்தலை யார் முன் எடுத்துச் செல்வது என்பது குறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *