
சென்னை: தமிழக அரசு சார்பில் வளரும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு சென்னையில் மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு’ என்ற கருத்துருவில் மாபெரும் உச்சி மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது:தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார நிலையை அடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.அதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 பில்லியன் டாலர் பங்களிப்பு இருக்க வேண்டுமென தீர்மானித்துள்ளோம். அதன் ஒருபகுதியாக ‘யூமாஜின் சென்னை’ என்ற தலைப்பில் மாபெரும் உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட உள்ளது.‘புளூ ஓஷன்’ விருது: இதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயலாற்ற இருக்கிறோம். இதில் பசுமை போக்குவரத்து, டிஜிட்டல் எதிர்காலம், அக்ரி நெக்ஸ்ட், காலநிலை மாற்றம், சுகாதாரம், புதிய தொழில்நுட்பம் ஆகிய 7 பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.இதுதவிர மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஒன்றுகூடி விவாதித்து வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தேவைக்கான செயல்பாடுகளை பரிந்துரைப்பர். மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.மேலும், இந்த மாநாட்டில் ‘புளூ ஓஷன்’ விருதுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விருது தொழில் முனைவோர் தங்களின் புதுமையான சிந்தனைகளை முன்னெடுக்க தொடக்கமாக இருக்கும்.இந்த விருதுக்கான பரிந்துரைகளை umaginechennai.com என்ற இணையதளத்தில் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த மாநாடு பல்வேறு புதிய முயற்சிகளுக்கு வழிசெய்வதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் திறன்மிக்க இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் தொழில் தொடங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. மேலும், புதுமைப் பெண் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான துணைத்தூதர் லிஸ் டால்போட் பாரே, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மித்தல், எல்காட் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என தகவல்கள் பரவுகின்றன. எனினும், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. அதனால் பொருளாதார மந்தநிலை பாதிப்பு தமிழகத்தை பெரிய அளவில் பாதிக்காது. புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எல்காட் நிறுவனம் மூலம் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மற்ற பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை செயல்பாட்டுக்கு வந்தபிறகு எல்காட் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.