
டெல்லி : ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்னும் தன்னார்வ அமைப்பு கார்ப்பரேட் அமைப்புகளிடம் இருந்து தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2019-2020 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளுக்கு ரூ. 920 கோடி நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன. இதில் பாஜக ரூ. 720 கோடி, காங்கிரசிற்கு ரூ.133 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ. 57 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 5 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.7 கோடி பெற்றுள்ளது.அதாவது மொத்த நன்கொடையில் 78% நன்கொடையை பாஜக பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில்தொடர்பு நிறுவனமான ஏர்டெலின் சார்பு அமைப்பான புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவிற்கு அதிகபட்சமாக ரூ.216 கோடியும், காங்கிரசிற்கு ரூ. 31 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்கு அடுத்ததாக ஐடிசி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.55 கோடியையும் காங்கிரசிற்கு ரூ.13.7 கோடியையும் நன்கொடை வழங்கியுள்ளது. 2019-2020 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமும் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3, 355 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு ரூ.2,555 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 318 கோடியும் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்ற பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவது பல மடங்கு அதிகரித்திருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.