2018ம் ஆண்டு 2,08,456 வழக்குகள் பதிவு: சைபர் குற்றங்கள் 3 ஆண்டில் 5 மடங்கு அதிகரிப்பு .! நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.!

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டில் 5 மடங்கு அளவிற்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற குழுவிடம் தகவல் தொடர்பு பாதுகாப்பு விஷயங்களை கவனிக்கும் அமைப்பு அறிக்கை சமர்பித்துள்ளது. தகவல் தொடர்பு பாதுகாப்பு விஷயங்களை கண்காணித்து வரும் ஒன்றிய அரசின் ஏஜென்சியான இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (செர்ட்-இன்) சில தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் விபரங்களை தகவல் தொழில்நுட்ப அமைச்சு நாடாளுமன்ற குழுவிடம் அளித்துள்ளது.அதன் விபரம் வருமாறு: இந்தியாவில் சைபர் குற்றங்கள் கடந்த 2018 முதல் 2021ம் வரை பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின்படி பார்த்தால் ஐந்து மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் வழக்குகளின் எண்ணிக்கை 2,08,456 ஆக இருந்த நிலையில், 2021ல் 14,02,809 ஆக ஐந்து மடங்குக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில், 2,12,485 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில், வீட்டிலிருந்தே பலர் ஆன்லைனில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சைபர் குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன.இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக நடந்தன. இத்தகைய சூழ்நிலையில், சைபர் குற்றத்துடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவை குறித்து ஒன்றிய அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தற்போதைய பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் 7,500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்து 193 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில், இந்தியா 10வது இடத்தில் உள்ளது. அதே கடந்த 2018ம் ஆண்டில் 47வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *