+2 மாணவிக்குப் பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக பணிபுரிபவர் ராஜ்குமார் (52). மதுக்கூர் அருகே உள்ள நெம்மேலி இவருடைய சொந்த ஊர். ராஜ்குமார் அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், விசாரணை செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மதுக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் மற்ற பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.இது குறித்து சிலரிடம் விசாரித்தோம். “பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. நேற்றும் வழக்கம் போல் தேர்வு நடைபெற்ற நிலையில், ஹால் சூப்பர்வைசர் பணியில் ராஜ்குமார் இருந்தார்.

மாணவி ஒருவர் தேர்வு எழுதி கொண்டிருக்க அந்த டேபிளுக்கு அருகிலேயே நாற்காலியை போட்டு ராஜ்குமார் அமர்ந்து கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.ஆசிரியரே இப்படி செய்கிறாரே என நொந்துபோன அந்த மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் என்று, மற்றவர்களுக்கு தெரியாத வகையில் ஆசிரியர் ராஜ்குமாரிடம், `இது மாதிரி செய்யாதீங்க சார்’னு சொல்லியிருக்கிறார். வக்கிர புத்தி கொண்ட ராஜ்குமார் அதன் பிறகும் பாலியல் சீண்டல்களை தொடர்ந்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தன் வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்இதையடுத்து அவர் குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகார் குறித்து, இன்ஸ்பெக்டர் ஜெயா மாணவியிடம் விசாரணை நடத்தினார். மேலும், தொடர்ந்து மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை எனத் தெரியவந்தது.இன்று காலை ஆசிரியர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஜெயா, அவரை தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சை சிறையில் ஆசிரியர் ராஜ்குமார் அடைக்கப்பட்டார். ராஜ்குமார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *