
சென்னை: தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்த 190 பேருக்கு ஊக்கத்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்.ரூ.4.85 கோடி அளவிலான ஊக்கத்தொகை வழங்கி முதல்-அமைச்சர் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பளு தூக்குதல், யோகாசனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் இன்றைய விழாவில் கலந்து கொண்டு ஊக்கத் தொகையை பெற்றுக் கொண்டனர்.