
டெல்லி: தலை நகர் புதுடெல்லியில் புதன்கிழமை காலையில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தமது வீட்டில் இருந்து பள்ளிக்கு அந்த சிறுமி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பைக்கில் வந்த இருவர் அவர் மீது அமிலம் போன்ற பொருளை வீசியுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.அந்த பொருள் வீசப்பட்ட சில நொடிகளில் அந்த பதின்ம வயது சிறுமி நடுங்கிப்போவது சிசிடிவி காட்சியில் தெரிகிறது.சம்பவம் நடந்தபோது அந்த சிறுமியுடன் அவரது சகோதரியும் இருந்துள்ளார்.இந்த விவகாரத்தில் காயமடைந்த சிறுமி ஆசிட் வீசியவர்கள் குறித்து தெரிவித்த அடையாளத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி துவாரகா போலீஸ் துணை கமிஷனர் (துவாரகா) ஹர்ஷ வர்தன் மாண்டவா இது குறித்து கூறுகையில், சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறார் பிரதான சந்தேக நபராக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் அடுத்தடுத்து பிடிபட்டனர். இந்த சம்பவத்துக்கான பின்னணியை முழுமையாக விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களிலும் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார். சிறுமியின் தந்தை ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசும்போது, “குற்றம்சாட்டப்பட்டவர்கள் முகத்தை மூடியிருந்ததை சிசிடிவி காட்சிகளில் பார்க்கலாம். எனது இரண்டு மகள்களும் காலை 7.29 மணிக்கு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். காலை 7.35 மணியளவில் எனது இளைய மகள் வீட்டிற்குத் திரும்பி வந்து, இரண்டு சிறுவர்கள் தனது மூத்த சகோதரி மீது அமிலத்தை வீசியதாக கூறினார்,” என்று தெரிவித்தார்.இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் (DCW), டெல்லி போலீஸ் ஆணையருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளன. சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியின் தந்தையை தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேரில் சந்தித்து நிலைமை குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க முழு ஆதரவை தருவதாகவும் ஆணையத்தின் அதிகாரிகள் உறுதியளித்தனர்.டெல்லி மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் வெள்ளிக்கிழமைக்குள் சம்பவம் குறித்து விளக்கம் தரும்படி கேட்கப்பட்டுள்ளது.