12 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி – மதுரை ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு..!

மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரையில் இருந்து தேனி வரை மே 27 ஆம் தேதி முதல் தினசரி ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மதுரை – போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கிலோ மீட்டர் தூரம் ‌உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் வகையில், அகல ரயில் பாதை திட்டம் 450 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது. இதில் மதுரையிலிருந்து தேனி வரை உள்ள 75 கி.மீ தூரத்தில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று பல்வேறு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் அனைத்து கட்ட ஆய்வு பணிகளும் முடிவடைந்து விட்டன. மேலும் தேனி ரயில் நிலையத்திலிருந்து போடிநாயக்கனூர் ரயில் நிலையம் வரை உள்ள பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதல் கட்டமாக தற்பொழுது மதுரையிலிருந்து தேனி வரை உள்ள வழித்தடத்தில் பயனிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்க வரும் 26 ஆம் தேதி தமிழகம் வர உள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.தினசரி காலை 8.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த புதிய ரயில் 9.30 மணியளவில் தேனி ரயில் நிலையம் வந்தடையும்.‌ மீண்டும் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டு இரவு 7.35 மணி அளவில் மதுரை ரயில் நிலையத்தை சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேனி மாவட்டத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் பொது மக்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் தற்பொழுது மீண்டும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது தேனி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *