
மும்பை :மும்பையில் கடந்த மார்ச் மாதம் மெபட்ரோன் என்ற போதைப்பொருளுடன் சிக்கிய சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் ஒரு கும்பல் வீட்டிலேயே போதைப்பொருள் ஆலை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி நாலச்சோப்ரா பகுதியில் வீட்டில் உள்ள போதைப்பொருள் ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 700 கிலோ எம்.டி. போதைப்பொருள் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.1,400 கோடி என போலீசார் கூறினர்.இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத் மாநிலத்தில் இருந்து எம்.டி. போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு மும்பையில் உள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்படுவதும் தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி மும்பை போலீசார் குஜராத் மாநிலம் அங்லேஷ்வர் பகுதிக்கு சென்றனர். மேலும் அவர்கள் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்த இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 513 கிலோ எம்.டி. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும். மேலும் போலீசார் போதை பொருள் ஆலை நடத்தி வந்த கிரிராஜ் தீக்சித் என்பவரையும் கைது செய்து இதில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.