ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் ஒரே மகன் ஜெயந்த் (33). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்த இவர், என்சிசியில் சிறந்த மாணவராகத் தேர்வானார். பட்டப்படிப்பு முடித்ததும் 2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து மேஜர் பதவியை அடைந்தார். இவருக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த சாராஸ்ரீக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.இந்நிலையில் ஜெயந்த், மார்ச் 16-ம் தேதி லெப்டினன்ட் விபிபி.ரெட்டியுடன் இணைந்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து தீப்பற்றியதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.இதையடுத்து ஜெயந்த் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு நேற்று காலை வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற நலச்சங்க அலுவலகம் முன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் அமைச்சர், அதிகாரிகள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடுப்பட்டியில் உள்ள மயானத்தில் ஜெயந்த் உடலில் போர்த்தியிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு அவரது மனைவி சாரதாஸ்ரீயிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *