
புதுடில்லி: மியான்மரில், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத மியாவாடி பகுதியில் தமிழர்கள் உட்பட 60 இந்தியர்கள் சிக்கிதவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி வருகிறது. அப்படி ஏமாறுபவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி 60 பேர் ஏமாந்துள்ளனர். தற்போது அவர்கள், மியான்மர் அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லாத மியாவாடி பகுதியில் உள்ளனர். இந்த பகுதி, ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் அந்த குழுவின் பிடியில் உள்ளனர். அவர்களை மீட்பதற்காக, மியான்மர் அரசுடன் இணைந்து நமது தூதரகம் செயல்பட்டு வருகிறது.இதற்காக பல்வேறு வழிகளில் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இதுவரை 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.