
வேலூர் : வேலூர் கோட்டையில் கடந்த 2020ஆம் ஆண்டு இளம்பெண் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு குற்றவாளிகளுக்கு 31 வருடம் ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கி மகிளா நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி பேசுவதற்காக வேலூர் கோட்டைக்கு செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் காதல்ஜோடி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இரவுநேரத்தில் காதல்ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 2-பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை பறித்தனர்.தொடர்ந்து 2 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் பூங்காவை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த அட மணி(எ) மணிகண்டன், வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் (எ) கோழி, இளம்பெண் அணிந்த கம்மல் மற்றும் செல்போன்களை வாங்கி விற்ற தொரப்படியை சேர்ந்த கொய்யா(எ) மாரிமுத்து என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடைபெற்றது. இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்ளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியான அட மணி(எ)மணிகன்டனுக்கும், இரண்டாவது குற்றவாளியான சக்திவேல்(எ)கோழிக்கும் 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆயிரம் அபராதமும், பெண்ணின் பொருட்களை வாங்கி விற்ற கொய்யா(எ) மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.