
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 17.88 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது மெட்ரோ ரயில்களின் தினசரி பயணிகள் எண்ணிக்கை 1.37 லட்சத்தை கடந்துள்ளது. கோடை காலம் நெருங்கவுள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.பயணிகள் வரவேற்புஇது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “சென்னையில் மெட்ரோ ரயில்சேவை மூலம் மக்கள் விரைவாக செல்ல முடிகிறது. விமான நிலையம், சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய பகுதிகளும் மெட்ரோ ரயில்களில் இயக்கப்படுகின்றன. வெயில் காலம் தொடங்கவுள்ள நிலையில், ஏசியில் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது நன்றாக இருக்கிறது’’என்றனர்.இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பயண அட்டை பயன்படுத்துவோருக்கு கட்டண சலுகையும் அளிக்கப்படுவதால், பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல், மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.கரோனா பாதிப்புக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பயண அட்டைக்கு கட்டண சலுகையால் வரவேற்பு கிடைத்துள்ளது.