வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளிப்பு: சென்னையில் பரபரப்பு

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை எதிர்த்து குடியிருப்புவாசி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையின் அருகில் பங்கிஹ்காம் கால்வாயையொட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகியவை உள்ளன. இதில் இளங்கோ தெருவில் சுமார் 259 வீடுகள் ஆக்ரமிப்பில் உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வீடுகளை இடிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இதனை அப்பகுதி மக்கள் வாங்கவில்லை. இதுதொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பினர்.

ஆனாலும், இளங்கோ நகரில் உள்ள வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர். கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிக்க முற்பட்டபோது சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவதாக எச்சரித்ததால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இதன்பின்னர் நோட்டீஸ் பெற மறுத்தவர்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக அவற்றை ஒட்டும் பணிகளும் நடந்தன.

’60 வருஷமா வசிக்குற வீட்டை விட்டுட்டு எங்க போறது, எங்க பிள்ளைகள் எல்லாம் இங்கதான் படிக்குறாங்க. எந்த அவகாசமும் கொடுக்காமல் இடிக்கணுமா? நாங்க அமைதியாத்தானே போராட்டம் நடத்தறோம், எங்க வயித்துல ஏன் அடிக்கறீங்க?’ என கூறி அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர். இருப்பினும் வீடுகளை அகற்றும் பணி நிறுத்தப்படவில்லை.

ஒருகட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய உள்ளூர்வாசிகள் அவரை அவசர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

”என்ன நடக்கிறது?” என இளங்கோ நகரைச் சேர்ந்த பொறியாளர் மோகன்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ”எனக்கு 37 வயதாகிறது. இங்குதான் பிறந்து வளர்ந்தேன். ஒரு தனி நபருக்காக மொத்த அரசு இயந்திரமும் வேலை பார்க்கிறது. அந்த நபர் பட்டா நிலத்தில் குடியிருப்பதால் எங்க மக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததால் அதையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு அராஜகமாகவும் நாகரிகமற்ற முறையிலும் அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை” என கூறினார்,

” முதலமைச்சர் உள்பட உயர் அதிகாரிகளுடம் மனு கொடுத்துள்ளோம். யாரும் எங்கள் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. தற்போது கண்ணகி நகரிலும் செம்மஞ்சேரியிலும் படப்பையிலும் வீடுகளை ஒதுக்கியுள்ளனர். அவையெல்லாம் வாழத் தகுதியற்ற இடங்களாக உள்ளன. சுமார் 50 கி.மீட்டர் தள்ளி எங்களை தனித்தனியாக பிரித்து அனுப்புகின்றனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நாளை அந்த வழக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக வீடுகளை இடித்துவிடப் பார்க்கின்றனர். நோட்டீஸ் வாங்க மறுப்பவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து பாத்திரங்களை வெளியே தூக்கி வீசுகின்றனர். வலுக்கட்டாயமாக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்” என்கிறார்.

மேலும், ” மனித உரிமைகளை மீறும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். எங்களுக்கு எதிரில் கால்வாய் ஓரத்தில் இருந்தவர்களை எல்லாம் கடந்த ஆண்டுகளில் மிக நாகரிமாக அப்புறப்படுத்தினர். ஆனால், எங்களை மிகக் கேவலமாகப் பேசுகின்றனர். இதனை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்தார். அவரை தடுப்பதற்குக்கூட அதிகாரிகள் முன்வரவில்லை” என்கிறார்.

அரசின் அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிராக நகர்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், ‘ இளங்கோ நகரில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் இணைப்பு, ரேசன், ஆதார் அட்டை என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கால்வாய் அருகில் இருந்த 366 குடியிருப்புகள் அகற்றப்பட்டபோது, அதன் எதிரில் உள்ள இளங்கோ நகர் அகற்றப்படாது என ஆட்சியாளர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அறுபது ஆண்டுகளாக சிரமப்பட்டு கட்டப்பட்ட வீடுகளை எல்லாம் புல்டோசர் உதவியுடன் இடிக்கின்றனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ‘ தனிநபர் தொடுத்த வழக்கில் மக்களுக்காக வாதாட வேண்டிய அரசு, நிலங்கை வகைமாற்றம் செய்யாமல் உள்ளது. நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மறைமுக திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறது’ எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, ” நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இவர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்கியும் அங்கு செல்வதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. அரசுத் தரப்பில் இருந்து அவர்களது வாழ்வாரத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *