விழுப்புரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து துரை.ரவிக்குமார் எம்.பி. தீடீர் ஆய்வு.!

விழுப்புரம்: விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள், அமரும் இருக்கைகள், ரெயில்களின் வருகை குறித்த விவரங்களை தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள், ஏ.டி.எம். மைய வசதி போன்றவை உள்ளதா என்பதை அறியும் வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதும், ஏ.டி.எம். மையம் இல்லாததும் தெரியவந்தது. உடனே அவர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை வரவழைத்து இதுகுறித்த விவரத்தை எடுத்துரைத்தார். அதற்கு ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்தார். அதுபோல், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பேட்டரி கார் இல்லாதது குறித்து, ரெயில் நிலைய அலுவலரிடம் துரை.ரவிக்குமார் எம்.பி. கேட்டார். அதற்கு விரைவில் அந்த வசதி செய்துத்தரப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.அதன் பின்னர் துரை.ரவிக்குமார் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா நோய் தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி பயணிகள் வலியுறுத்தினர். குறிப்பாக விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு பகல் நேரத்தில் ரெயில் சேவை வேண்டும் எனக்கோரியுள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்ச் மாத முதல் வாரத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் எம்.பி.க்கள் பங்கேற்கும் கூட்டத்தில் எடுத்துரைப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *