
சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே, அன்பு ஜோதி ஆதரவற்றோர் ஆசிரமத்தை, ஜூபின் பேபி என்பவர், நடத்தி வந்தார். இங்குள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், விழுப்புரம் காப்பகம் தொடர்பாக விசாரித்து, ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.