
விழுப்புரம்: காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் இரு சிறுவர்கள் உட்பட 7 இருளர்களை சித்ரவதை செய்து, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல்துறையின் செயலை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 20/03/23ல் நடைபெற்றது. பழங்குடி இருளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சிவகாமி, பொதுச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றரசு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முஸ்தாக்தீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பழங்குடி இருளர்களை சித்திரவதை செய்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த புதுச்சேரி காட்டேரி குப்பம் போலீசார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல்நிலையத்தில் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை பழங்குடி இருளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். பொய் வழக்கு பதிவு செய்து சாதி வெறியுடன் நடந்து கொண்ட காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இருளர் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இருளர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.