
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:- பட்டா மாற்றம் செய்து தரக்கோரி மனு கொடுத்தால் உடனுக்குடன் பட்டா மாற்றம் செய்து தருவதில்லை. ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் பட்டா மாற்றம் தொடர்பாக மனுக்கள் குவிந்து கிடக்கிறது, அணைக்கட்டுகளை சீரமைக்க வேண்டும் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது சாலாமேடு பொன்னேரி, வி.மருதூர் ஏரிகளில் கலக்கிறது. இதனால் ஏரிநீர் மாசடைந்து, அதனை விளை நிலங்களுக்கு பாய்ச்சினால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம், தளவானூர், சொர்ணாவூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். விழுப்புரம் அருகே தென்னமாதேவியில் உள்ள சுங்கச்சாவடியில் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களும் சுங்க வரி வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவி விவரங்களை விவரமாக தெளிவுப்படுத்த வேண்டும். சுங்கவரி வசூலிக்க கூடாது விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிக்காக கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கிறார்கள். அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். நாகப்பட்டினம் செல்பவர்களிடம் மட்டும் சுங்கவரி வசூலியுங்கள். விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கோ, முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கோ வரக்கூடிய எங்களை போன்ற விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம். பணத்தை குறிக்கோளாக கொண்டு இங்கு சுங்கச்சாவடி அமைக்கிறார்கள். கண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம் வருவதற்கு வசதியாக கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியின் அருகில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இதற்கு ஒரு முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். 2021-22-ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் சி.பழனி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் ஷோபனா, வேளாண் இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் எள் விதைகளை உற்பத்தி செய்து கொடுப்பதில்லை. அம்மையத்தில் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி வகுப்புகளும் சரிவர நடத்துவதில்லை. இதுவரை அம்மையத்தில் பயிற்சி பெற்றதற்காக எந்தவொரு விவசாயிக்கும் சான்றிதழ் வழங்கியது கிடையாது என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு அம்மையத்தின் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் பொறுப்பற்ற முறையிலும், அலட்சியமாகவும் பதில் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பற்ற முறையிலும் ஆணவமாகவும் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கலெக்டரின் செயல்பாட்டுக்காக விவசாயிகளாகிய நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம், இல்லையெனில் வெளிநடப்பு செய்வோம், இதே நிலைமை நீடித்தால் விரைவில் திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றனர். உடனே மாவட்ட கலெக்டர் சி.பழனி குறுக்கிட்டு பேசுகையில், குறைதீர்ப்பு கூட்டம் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கூடிய கூட்டமாக அமைய வேண்டும். இங்கு வந்து விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சரியல்ல. விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்து அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தினார்.