
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர். ஆசிரியர்களில் சிலரும் பள்ளியின் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை அந்தப் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென்று கீழே குதித்துள்ளார். இதில் காயமடைந்த மாணவியை மீட்ட ஆசிரியர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக அந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது, அப்பள்ளியின் விலங்கியல் பாட ஆசிரியர் சாமிநாதன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரேவதியிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், ஆசிரியர் சாமிநாதனை போக்சோ வழக்கில் இன்று போலீசார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட ஆசிரியர் சாமிநாதனிடம், போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் செல்போனிற்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆபாச படங்களை அனுப்பியதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது. மேலும் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியை முதல் தளத்திலுள்ள ஆய்வக அறைக்கு அழைத்து மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதும் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பு கூறியது. இதனால் மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.