விருதுநகர் பாலியல் வழக்கு: கைதானவர்களின் செல்போன்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு!

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம் பெண்ணை அவரின் காதலர் ஹரிஹரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. . இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் காதலரும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்த ஹரிஹரன் அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ‘பொள்ளாச்சி சம்பவம் போல் அல்லாமல் விருதுநகர் பாலியல் வழக்கு மாடல் வழக்காக எடுத்து விசாரிக்கப்படும், இதனை காவல் துறை இயக்குநர் நேரடியாக கண்காணிப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி குற்றப்பத்திரிகையை 60 நாள்களுக்குள் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விருதுநகருக்கு சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி தலைமையிலான அதிகாரிகள் நேற்று வந்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல்துறையிடமிருந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையின் 2-ம் நாளான இன்று கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள், லேப்டாப், பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டு அதனை தடயஅறிவியல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன் உள்பட 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *