
கரூர்: விதிமீறலில் ஈடுபட்ட 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்கள். இதற்கு கல்குவாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் விதி மீறல்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிய மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது சோதனை மேற்கொள்வதுண்டு. இந்நிலையில், கரூர் மாவட்ட வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு அமைத்து 42 குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 12 குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 12 கல்குவாரிகளுக்கும் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட கல்குவாரிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டன. மீதமுள்ள முப்பது கல்குவாரிகளும் விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றுக்கும் விரைவில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கரூர் பகுதி கல் குவாரி உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.