
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.எம்பி., தமிழக காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபுவை 27/02/23 நேற்று சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அதனை தொடர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் பேசியதாவது:- பாஜவினர், வடமாநிலங்களில் வெறுப்பு பரப்புரையின் மூலம் வன்முறைகளை தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே உத்திகளை, தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பதை காவல்துறை இயக்குநர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றோம். விடுதலைச் சிறுத்தைகள் மீது வழக்கு பதிவு செய்து 7 தனிப்படை பிரிவை அமைத்து ஆரணியில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கிராமம் கிராமமாக வேட்டை ஆடுகிறார்கள். அந்த சம்பவத்தில் 26 பேரை கைது செய்தது போதாது என்றும், மேலும், கிராமம் கிராமங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், திட்டமிட்டு வன்முறையை பரப்பக்கூடிய நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யவில்லை. ஆகவே தான் பாஜவின் இந்த சதி முயற்சியை சுட்டிக்காட்டி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.