
அமிர்தசரஸ்: பஞ்சாபை சேர்ந்த, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி லவ்ப்ரீத் டூபான் என்பவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, அமைப்பின் ஆதரவாளர்கள் துப்பாக்கி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாபில், நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து என்பவர், ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை துவங்கி நடத்தி வந்தார். தங்களுக்கென தனி கொள்கை, கோட்பாடுகளுடன் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில், தீப் சித்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அம்ரித்பால் சிங் என்பவர் இந்த அமைப்பின் அடுத்த தலைவராக பொறுப்பேற்றார்.இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான லவ்ப்ரீத் டூபான் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சமீபத்தில் கைது செய்தனர். இதை கண்டித்து, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமிர்தசரசில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வாள், துப்பாக்கியுடன் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், லவ்ப்ரீத் டூபான் விரைவில் விடுவிக்கப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.