
நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய திறப்பு விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சனிக்கிழமை கலந்துகொண்டார்.அமைச்சருடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிந்து அமைச்சர் காரில் ஏற சென்றபோது சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அமைச்சரை வழிமறித்து, கிராமத்தில் ஒரு சாலை கூட உருப்படியாக இல்லை. கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சருடன் வந்த அதிகாரிகள் நீங்கள் மனுவாக, உங்களது கோரிக்கைகளை எழுதி கொடுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறினர்.அதற்கு கிராம மக்கள் பல தடவை மனு எழுதி கொடுத்துவிட்டோம் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.